மதுரையில் கல்விக்கடன் வழங்குவதாகக் கூறிய ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுதெருவை சேர்ந்த தாரணி என்ற அந்த மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பின் சட்டம் பயில ஆசைப்பட்ட தாரணி அதில் சீட் கிடைக்காததால், 5மாதங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐ கேட் டிசைன் அன் மீடியா கல்லூரியில் பி.எஸ்.சி பேஷன் டிசைன் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு 2 லட்ச ரூபாய் வரை கல்விக்கட்டணம் ஆகும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்படவே, தாயின் சொற்ப வருமானத்தில் படித்து வந்த தாரணி, கல்விக்கடன் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். ஆன்லைனில் மீனாட்சி பைனான்ஸ் என்ற பெயரில் கல்விக்கடன், தனிநபர் கடன், விவசாயக் கடன் உள்ளிட்டவை பெற்றுத் தரப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார்.
அதில் பேசியவர்கள், 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடனுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பி முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயும் அடுத்தகட்டமாக தாயின் தங்கச் சங்கிலியை அடகு வைத்து 26 ஆயிரத்து 600 ரூபாயையும் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கு எண்ணில் தாரணி செலுத்தினார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதன் பின்னர், குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. பலமுறை முயற்சித்தும் ஆன்லைன் நபர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படும் நிலையில், பணம் இழந்தது குறித்து தோழிகளிடம் தாரணி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில்தான் காலை தாய் வெளியே சென்றிருந்த நிலையில், தாரணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட போலீசார், வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முகம் தெரியாத ஆன்லைன் மோசடி கும்பலை நம்பி, எக்காரணம் கொண்டும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.