அரசு பேருந்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நான்கு பெண்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து ஆற்காடு செல்வதற்காக பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் அருகில் அமர்ந்திருந்த நான்கு பெண்கள், அந்தபெண் அசந்த நேரம் பார்த்து , அவரின் கைப்பையை திருடி கொண்டு, நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் பேருந்து நின்றவுடன் இறங்கியுள்ளனர்.
உடனடியாக தனது கைப்பை காணவில்லை என்பதை கவனித்த பயணி, ”என் பையை காணோம் திருடிட்டு போறாங்க பிடிங்க பிடிங்க” என கூச்சலிட்டுள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள் கைப் பையுடன் தப்பியோடிய நான்கு பெண்களையும் பிடிக்க முயன்றனர். ஆனால் புயல் வேகத்தில் நால்வரும் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் தப்பிவிட , மற்ற மூவரையும் சேஸ் செய்து பிடித்து முறைப்படி கவனித்துள்ளனர் . பின்னர் மூவரையும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் சேலம் அயோத்திப் பட்டணம் பகுதியை சேர்ந்த 25வயதாகும் பிரியா, 28 வயதாகும் சபீனா , 30 வயதாகும் ஜமுனா என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மீது, ஏற்கனவே பல வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 3 ரோசஸையும் கைது செய்த நாட்றம்பள்ளி காவல்துறையினர், தப்பியோடிய ஒத்த ரோசா குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.