ராசிபுரத்தில் இறந்து போன தெருநாய்க்கு பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வளர்ப்புப் பிராணிகள் என்றாலே பலருக்கும் சந்தோஷம். அதிலும் வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்புண்டு. பக், பொம்மேரியன், டாபர்மன் எனப் பல வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
காவல்துறைக்காக, வீட்டுப் பாதுகாப்பிற்காக, வேட்டைக்காக எனப் பல காரணங்களுக்காகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படியான ஒரு நாய் தான் விக்கி.
ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோவில் பகுதிகளில் சுற்றி திரியும் நாய் தான் விக்கி. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதிமக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது. விக்கிக்கு உணவிட்டு தங்களின் பிள்ளையை போலவே பராமரித்து வந்துள்ளனர்.
இரவில் அந்நியர் எவரையும் அந்த தெருவில் பிரவேசிக்கவிடாது. இதனால் திருடர்கள் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே விக்கி சுகமில்லாமல், சோர்வுடன் காணப்பட்டுள்ளது. விக்கிக்கு , முறையாக சிகிச்சையளித்தும், பலனின்றி உயிரிழந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். பின்னர் விக்கியை கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர். விக்கி இறந்ந சோகத்தை தாள முடியாமல் பிளக்ஸ் போர்டு வைத்து, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.