தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.
மாதேஷ்வரன் மற்றும் ராகவன் என்ற 2 இளைஞர்கள் குடிபோதையில் விபத்திற்கு உள்ளாகிய நிலையில், சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனை வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காத அந்த இளைஞர்கள், திடீரென பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதைத்தடுக்க வந்த சக மருத்துவ பணியாளர்களையும், மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவரை தாக்கிய 2 இளைஞர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.