திருப்பூரில் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால், கால் முறிந்த கணவனை ஆம்னி வேனில் வைத்து உயிரோடு எரித்து கொலை செய்ததாக விசைத்தறிபட்டறை உரிமையாளரின் மனைவி, உறவுக்கார இளைஞருடன் போலீசிடம் சிக்கி உள்ளார். 3 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி செய்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
திருப்பூர் அருகேயுள்ள துடுப்பதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ரங்கராஜன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, காலில் முறிவு ஏற்பட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஓரளவு குணமடைந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறி ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் திங்கட்கிழமை இரவு கோவையிலிருந்து துடுப்பதிக்கு ஆம்னி காரில் அழைத்து சென்றுள்ளனர். வீட்டுக்கு செல்லும் வழியில் பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, இறங்கி சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
திரும்பி வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் பொழுது, காரிலிருந்து புகை வந்ததாகவும், அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் ரங்கராஜனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை அவர் தீயில் சிக்கி காருடன் எரிந்து விட்டார் என்று போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார் எரிந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலைச் சம்பவம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. ரங்கராஜின் மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
ரங்கராஜ் தனது சொந்த ஊரான துடுப்பதியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீடு ஒன்றினை கட்டியுள்ளார். வீடு கட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் தெரிந்தவர்களிடம், ஒன்றரை கோடியளவில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திருப்பிக் கொடுக்காத நிலையில், நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
விபத்தில் சிக்கி நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட வேதனையில் ரங்கராஜன் மனைவி ஜோதிமணியிடம் கடன் தொல்லை அதிகளவில் இருப்பதால், நீ என்னை காருடன் தீவைத்து எரித்து கொன்றுவிட்டால், விபத்தில் நான் இறந்து விட்டேன் என்று யாரும் உனக்கு கடன் கேட்டு தொல்லை தர மாட்டார்கள் என்று கூறியதாகவும், தனது கணவர் பேச்சை கேட்டு அவர் விருப்பபடியே மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி காருடன் சேர்த்து தீவைத்து எரித்து கொன்றதாக மனைவி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதற்கு உதவியாக உறவினர் ராஜா இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ராஜாவிடம் விசாரித்த போது தனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஜோதிமணி கூறியதால் உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில் அதிபர் ரங்கராஜன் தனது பெயரில் 3 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்ததாகவும் அதனை பெற வேண்டும் என்ற ரகசிய திட்டத்துடன், விபத்து போன்றதொரு இந்த கொலையை ஜோதிமணி திட்டமிட்டு செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், ஜோதிமணி, ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
ரங்கராஜின் மகன்கள் இருவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படிப்பை முடித்துவிட்டு ஒருவர் அமெரிக்காவிலும், இன்னொருவர் ஷேர் மார்க்கெட் தொழிலும் செய்து வருவதால் கடன் தொல்லை தவிர்த்து இந்த கொலைக்கு பின்னணியில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.