கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலின் போது, காரைக்கால் அருகே தரைதட்டி ஒதுங்கிய கப்பலை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.
காரைக்கால் மாவட்டம் மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்திற்கு, தூர்வாரும் பணிக்காக மும்பையில் இருந்து வீரா பிரேம் என்ற கப்பல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணியை முடித்துக்கொண்டு கப்பல் மும்பை புறப்பட்டது.
அப்போது கஜா புயல் தாக்கியதில் அந்த கப்பல் மேலவாஞ்சூர் கடல் பகுதியிலேயே தரைதட்டி நின்றது. இதனால், கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 7 பேர், பல நாட்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
கப்பலை உடனே அப்புறப்படுத்த முடியாது என தெரிந்த பிறகு, அதில் உள்ள அனைவரும் வேறு கப்பல் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தரை தட்டிய கப்பலை அப்புறப்படுத்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவும் பயன் அளிக்காமல் போனது. இந்த நிலையில் , கப்பலை உடைத்து எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கப்பலை உடைக்கும்போது அதில் இருக்கும் ரசாயன பொருட்கள், எண்ணெய் மற்றும் கழிவுப்பொருட்கள் கடல் நீரில் கலந்தால், கடல் மாசு அடைவதுடன், மீன்வளம் பாதிக்கும். எனவே சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கப்பல் சற்றும் நகராமல் அங்கேயே உள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வீசிய நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி தரை தட்டிய கப்பல் சிறிது சிறிதாக சேதமடைய துவங்கியது.
கடல் சீற்றத்தால் சேதம் அடைந்து வரும் தரை தட்டிய கப்பலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ஷர்மா அதிகாரிகள் குழுவுடன் சென்று அப்பொழுது ஆய்வு மேற்கொண்டார்.
இந்தநிலையில், கடல் சீற்றம் காரணமாக கப்பலின் பாகங்கள் துருப்பிடித்து, தானாகவே சிறிது சிறிதாக உடைந்து கடலில் கலக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள கப்பலின் பாகங்களை தற்பொழுது உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.