ஜெயங்கொண்டத்தில் இஸ்லாமிய நண்பரின் மறைவை கேட்டு, அடுத்த விநாடியே இந்து நண்பர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜூபிலி ரோட்டில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். மகாலிங்கம் வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வந்தவர் ஜெய்லாபுதீன். இவர், ரைஸ்மில் நடத்தி வருகிறார். மகாலிங்கமும் ஜெய்லாபுதீனும் இணை பிரியாத நண்பர்கள். பள்ளி பருவத்திலிருந்தே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவர் வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் நண்பர்கள் இருவரும் இணைந்தே முன்னின்று நடத்துவார்கள்.
இந்நிலையில் , மகாலிங்கத்துக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அருகருகேயுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் ஜெய்லாபூதின் முதலில் இறந்து போனார். இந்த தகவலை அறிந்த மகாலிங்கமும் உடனடியான இறந்து விட்டார். நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தது அந்த பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து இருவரது மகன்களும் கூறுகையில், எங்களது தாத்தா காலம் தொடங்கி எங்களது தந்தை காலம் வரை இரு குடும்பமும் மாமன் மைத்துனர் முறையில் ஒன்றாகவே வாழ்ந்து வந்துவிட்டோம் .இதன் பிறகும் எங்களது காலம் மற்றும் எங்களின் சந்ததியினர் காலமும் தொடர்ந்து இரு குடும்பமும் இதேபோன்று ஒற்றுமையாகவே வாழ்வோம். இந்த உலகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்வோம் என்கின்றனர்.