தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஓட்டுபோட்டால் குவாட்டர் இலவசம் என்று சொன்ன அரசியல் கட்சியை நம்பி ஜனநாயக கடமையாற்ற, புறப்பட்ட குடிமகனின் வாக்காளர் அடையாள அட்டையை, மனைவி எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்தார். இதனால் அந்த மதுப் பிரியர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை நாடகமாடி இறுதியில் தர்ம அடிவாங்கிய பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் தான் ஒற்றை குவாட்டர் பாட்டிலுக்காக ஓட்டுப் போட ஆர்வமாக கிளம்பிய குடிகாரர்..!
குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக்கியதால் வேதனையடைந்த ஜெபராஜின் மனைவி அவரது வக்காளர் அடையாள அட்டையை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்தார்.
ஆல்ரெடி அரை பாட்டில் அரக்கனை குடலுக்குள் இறக்கி இருந்த ஜெபராஜ் போதை தலைக்கேறிய நிலையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். நேரம் கடந்த நிலையில் ஓட்டுக்கு குவார்ட்டர் என்ற அரசியல் கட்சியின் ஆபருக்கு ஆப்படித்த மனைவி மீது ஆத்திரமடைந்த ஜெபராஜ் முதலூரில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
மது குடித்த மந்தி போல செல்போன் டவரின் மீது தொங்கியும், சவால் விட்டும் ஜெபராஜ் செய்த சேட்டைகள் நேரம் செல்ல செல்ல அதிகமானது.
தனது வாக்காளர் அடையாள அட்டையை மனைவி வீட்டில் மறைத்து வைத்து உள்ளதாகவும், அதனால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி புலம்பிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று செல்போன் டவர் மீது ஏறி ஜெபராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செல்போன் டவர் மீது நின்றுகொண்டிருந்த ஜெபராஜ் செல்போன் டவரின் பக்கவாட்டு கம்பியில் தொங்கியவாறும், ஸ்டைலாக சிகரெட் பிடித்தவாறும் செய்த கூத்துக்கள் போலீசாரை காண்டாக்கியது.
சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ் தலைமையிலான போலீசாரின் வாக்குறுதியை நம்பி டவரில் இருந்து கீழே இறங்கிய ஜெபராஜ் டவர் இருந்த கட்டடத்தில் நின்று கொண்டு அடம்பிடித்தான். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் மவனே கீழே இறங்கி வாடி உனக்கு கும்மாங்குத்து இருக்கு என எச்சரித்ததால், என்ன செய்வதென்றே தெரியாமல் கட்டடத்தின் பக்கவாட்டு பகுதியில் குதித்து தப்பி ஓடினார்.
அவரை மடக்கிப்பிடித்த நண்பரொருவர் ஜெபராஜுக்கு தர்ம அடி கொடுத்தார். அவரிடம் இருந்து ஜெபராஜை பத்திரமாக மீட்டு விசாரித்த போலீசாரிடம் தனது மனைவி மீதான மனக்குமுறலை அந்த சிறுத்தை கொட்டித்தீர்த்தது.
பின்னர் ஜெபராஜ் தனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காத ஆத்திரத்தில், செல்போனை உடைத்து சுக்குநூறாக வீசி தன்னால் தேர்தலில் ஓட்டுபோட முடியவில்லையே என்பதை விட ஒரு குவாட்டர் போச்சே..! என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் மக்களையும் போலீசாரையும் சில மணி நேரம் படாத பாடு படுத்திய குடிமகன் ஜெபராஜ், சிறப்பு கவனிப்புக்காக இரு சக்கரவாகனத்தில் ஏற்றி ஆபீஸ் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மது குடித்தால் வாடை வெளியே தெரியாமல் குப்புற படுப்பதை விடுத்து, வாய் சவடால் விட்டு ஊராரை வம்புக்கு இழுத்தால் என்ன மாதிரி கவனிப்புக்கள் கிடைக்கும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கிறது இந்த சம்பவம்..!