தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அசாமில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் இன்று நடந்தது.
தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர்.
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திமுக எம்.பி கனிமொழி கொரோனா உடையுடன் வந்து வாக்களித்தார்.
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள், என அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தேமுதிகவின் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஸ், விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என அனைவரும் வாக்களித்த போதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.