தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள், இயந்திரக் கோளாறு, கட்சியினருக்கிடையே வாக்குவாதம், மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.
நாமக்கல்லில் வாக்காளர்களுக்கு தங்கக்காசுக்கான டோக்கன் வழங்கிய சம்பவத்தில் திமுக, அதிமுகவினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் வாக்களிக்கும்போது செல்போனில் அதனை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துச் சென்று சம்மந்தப்பட்ட கட்சியினரிடம் சிலர் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி அத்திமாகுலப்பள்ளியிலும் வாக்களிக்கும்போது அதனை வீடியோவாக எடுத்துச் சென்று கட்சிக்காரர்களிடம் காண்பித்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வாக்குப்பதிவு எந்திரத்தின் எந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் விளக்கு எரிவதாகப் புகார் எழுந்த நிலையில், புகாரளித்த நபர் முன்னிலையிலேயே அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்கிக் காட்டி அது தவறான குற்றச்சாட்டு என அதிகாரிகள் நிரூபித்தனர்.
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்களித்தபோது எந்திரம் பழுதானதால், அது சரி செய்யப்பட்டு, அவர் மீண்டும் வாக்கு செலுத்தினார். அமைச்சர் வாக்களிக்கும்போது விவிபேட் எந்திரம் திடீரெனப் பழுதானது. உடனடியாக அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுனர் வந்து எந்திரத்தை சரிசெய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கண்டிலான் கிராமத்தில் வாக்குச்சாவடி கட்டிடத்தின் காங்கிரீட் ஸ்லாப் மழை காரணமாக இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.