முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
சேலத்தில் தங்கியிருந்த முதலமைச்சர் பழனிசாமி, காலையில் எடப்பாடி அருகே உள்ள அவரது சொந்த ஊரான சிலுவம் பாளையத்திற்கு சென்றார். அங்கு தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தமது தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சிலுவம் பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது மனைவி, மகன் மற்றும் பேரனுடன் நடந்து சென்றார். பொதுமக்களுடன் வரிசையில் நின்று காத்திருந்து முதலமைச்சர் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.