தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, 89 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் இன்று அனுப்பிவைக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை கண்காணிப்பதற்காக அவற்றில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இன்று எடுத்துச் செல்லப்படும்.
தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 1,55,102 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,14,205 கட்டுப்பாட்டுக் கருவிகளும்,1,20,807 விவிபேட் இயந்திரங்களும் தயார்நிலையில் உள்ளன.
பதற்றமானவை என இனங்காணப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். அவற்றில் மத்திய ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். காவல்துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.