கவுண்டம்பாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தான் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் உள்ள சிறுமிகளை கொஞ்சி குதூகலமாக வாக்கு சேகரித்து வருகின்றார். கருத்து கணிப்புகளை நம்பி உற்சாகமாக வலம் வந்த திமுக வேட்பாளரின் பிரச்சார யுக்தி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கவுண்டம் பாளையம் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பையா என்கிற ஆர். கிருஷ்ணன் இந்தமுறையும் திமுகவில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை பையாவுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக வருகின்ற கருத்துக்கணிப்புகளை நம்பி தொகுதியில் உற்சாகமாக வலம் வரும் அவர் வாக்கு சேகரிக்க செல்லும் வீடுகளில் சிறுமிகள் இருந்தால் அவர்களை பார்த்ததும் குதுகலம் அடைந்து விடுகிறார்.
சிறுமிகளின் கைகளை பிடித்து இழுத்து யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்பதும், அந்த சிறுமி திமுகவுக்கு என்று சொன்னதும், கையில் முத்தமிட்டு, அவர்களை அணைத்து உற்சாகப்படுத்துவதும் இவரது வழக்கமாக உள்ளது
சில இடங்களில் தனக்கு ஆரத்தி எடுக்கும் சிறுமிகளை வளைத்து பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று அவர்களிடம் நலம் விசாரிப்பதையும் வழக்கமாக்கியுள்ளார்.
இன்னும் சில சிறுமிகளிடம் அவர்களது காதுகளை தடவிக்கொடுத்து தாத்தா சேட்டைகளை செய்தும் பிரச்சார களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றார் பையா..!
ஆரத்தி எடுத்து வரவேற்கும் குடும்பத்தில் உள்ள சிறுமிகள் திமுக வேட்பாளரை தாத்தாவாக நினைத்துக் கொள்வதாக அவருடன் சொல்லும் கட்சியினர் தெரிவித்தனர்.