உழைப்பால் உயர்ந்த இயக்கமான அதிமுகவை எந்த காலத்திலும் வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜா என்கிற ராஜமுத்துக்கு, ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்டையாம்பட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து, சேலம் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என மாற்ற வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனுக்கு முதலமைச்சர் வாக்குகள் சேகரித்தார். லாரித் தொழில், நெசவுத் தொழில், விசைத்தறித் தொழில் ஏற்றம் பெற அதிமுக பக்க பலமாக இருக்கும என்று உறுதி அளித்தார்.
பின்னர் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அதிகமான பாலம் கட்டி போக்குவரத்து நெரிசலை குறைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.