முதுகுளத்தூர் அரசுப்பள்ளியில் பொது இடத்தில் அநாகரீகமாக குளித்து கொண்டிருந்ததால், அறிவுரை கூறிய சமையலரின் இரு சக்கர வாகனத்தை எரித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மாணவர் விடுதியில் சமையல்காரராக செல்வ தேவேந்திரன் என்பவர் பணியாற்றுகிறார். இங்கு அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பரும் தங்கியுள்ளார். விடுதியிலுள்ள பொது குளியல் தொட்டியில் குளிக்கும்போது அரசு பள்ளி ஆசிரியர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதை பார்த்த செல்வ தேவேந்திரன் ஆசிரியரை நாகரீகமான முறையில் குளிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சமையலர் செல்வ தேவேந்திரன் விடுதிக்கு சென்று விட்டார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர் விடுதிக்கு சென்று சமையலர் செல்வ தேவேந்திரனை தாக்க முற்பட்டார். பயந்து போன செல்வ தேவேந்திரன் விடுதி அறையின் உட்புறமாக பூட்டிக்கொண்டார். இதனால், மேலும் கோபமடைந்த ஆசிரியர் சுரேஷ், சமையல்காரர் செல்வ தேவேந்திரனின், இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.இதில் சமையல்காரரின் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து கருகியது. இந்த சம்பவம் தொடர்பாக, சமையலர் செல்வ தேவேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ், மற்றும் அவருக்கு உதவி புரிந்த ராஜா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.