கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, செந்தில் பாலாஜி வீட்டிற்கு முற்பகல் 11 மணியளவில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரி மலர்க்கொடி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது வீட்டில் உள்ள அவருடை தாய், தந்தையரிடம் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இதேபோல, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு, ராயனூரில் திமுக மேற்கு நகர செயலாளர் தாரணி சரவணன், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கொங்கு மெஸ் சுப்ரமணி ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை நடைபெறும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன், தேர்தல் பணிக்கு வந்துள்ள துப்பாக்கி ஏந்திய மத்திய படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார். திருவண்ணாமலையை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள, அண்ணாதுரையின் பூர்விக வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. சுமார் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், டைரி உள்ளிட்ட சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, முதலில் தமது வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து அதில் ஏதும் கிடைக்கவில்லை என்றார். அவர்கள் சென்ற பிறகு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாகவும், அதில் பணமோ பொருளோ ஏதும் கைப்பற்றப் படவில்லை என்றும் அவர் கூறினார்.