எமர்ஜென்சியையே பார்த்த தான், ஐடி ரெய்டுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருமான வரித்துறை மூலம் அதிமுகவை மிரட்டியதைப்போல திமுகவை மிரட்ட முடியாது என விமர்சித்துள்ளார்.
அரியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தனது மகள் வீட்டில் 100 போலீசார் பாதுகாப்புடன், வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் புகுந்து வருமான வரி சோதனை நடத்தியதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை என்றார்.
சமூகநீதிக்காக போராடி இடஒதுக்கீட்டை பாதுகாத்தது திராவிட இயக்கம் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்தது திமுக ஆட்சி என தெரிவித்தார்.
சிஏஏ, வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதிமுக, தற்போது அவற்றை எதிர்ப்பது போல நாடகமாடுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.