அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை, அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு என்கிற ரீதியில் செந்தில்பாலாஜியை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அரசியலுக்கு நுழைவதற்கு முன், அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் . விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்குடன் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தவர். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். பின்னர், உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணியாற்றினார். கடந்த 2018 ஆம் அக்டோபர் மாதம் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார்.
உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று செல்லப் பெயர் வைத்து இவரை அழைத்தனர்.
பின்னர், தன் அரசுப்பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை தற்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் இளங்கோ களத்தில் உள்ளார். இந்த தொகுதியின் தி.மு.க பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இதுவரை, சாந்தமாகவே பிரசாரத்தை மேற்கொண்ட அண்ணாமலை, சற்று உஷ்ணமாகி விட்டார் போலும். இதனால், அவரின் வார்த்தைகளும் வேறு விதமாக அமைந்து விட்டன.
செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். நானெல்லாம் எவ்ளோ பெரிய ஃபிராடுங்களை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன்.." என்று அண்ணாமலை பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அண்ணாமலை பேசுகையில், நான் வன்மத்தை கையில் எடுப்பதற்கு தயாராக கிடையாது. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறேன் என்றும் தனக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அது கர்நாடக முகம் என்று அந்த முகத்தை இங்கே காட்ட வேணாம்னு நினைக்கிறேன். என்றும் செந்தில் பாலாஜியை எச்சரித்தார். அதோடு, நீ என்ன செய்றியோ செய்.. இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.. நியாயப்படி, தர்மப்படி நடப்பேன் என்று அண்ணாமலை ஆவேசத்துடன் கூறினார்.
அண்ணாமலையின் பேச்சால் அரசியல் வட்டாரங்கள் அதிர்ந்து கிடக்கின்றன.