கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இயற்கைப் பேரிடர் காலங்களிலும், கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு திமுக துணைநின்றதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அரசையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக பிரதமர் கூறியதாக சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி சம்பவம் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது என கேள்வி எழுப்பினார்.
தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக கூறும் நிலையில், சிஏஏ வேண்டாம், நீட் தேர்வு தேவையில்லை, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறும் அதிமுகவிற்கு, அதை பிரதமரிடம் தெரிவிக்கும் தைரியம் உண்டா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளைய்ததில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு அலை மட்டுமல்ல அதிமுக மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள் என்று கூறினார்.