கன்னியாகுமரி அருகே தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ கண்டன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது, 41 வயதான இவர் தக்கலையில் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக இன்னோவா கார் ஒன்றை ஸ்ரீகண்டன் லோனில் வாங்கியுள்ளார். இதனால் , அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. வண்டியின் ஓட்டமும் குறைவாகவே இருந்துள்ளது. இதனால், லோன் கட்ட முடியாமல் ஸ்ரீகண்டன் கஷ்டப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக ஸ்ரீகண்டன் மன வேதனையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வீடு திரும்பிய ஸ்ரீகண்டன் மனைவியுடன் பேசாமல் அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார் . வெகுநேரமாக வெளியே வரவில்லை. மனைவி சந்தியா கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சந்தியா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீகண்டனின் சகோதரர்கள் பிரபாகரன், மற்றும் மணிகண்டன் ஆகியோரிடத்தில் கூறியுள்ளார்.
சகோதரர்கள் வீட்டுக்குள் வந்து அறைக்கதவை உடைத்து பார்த்த போது ஸ்ரீகண்டன் மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இருவரும் ஸ்ரீகண்டனை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். ஸ்ரீகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக சகோதரர்களிடத்தில் கூறியுள்ளனர்.
தம்பி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய வார்த்தையை கேட்டதும் சகோதரர் மணிகண்டன் கதறி அழுதுள்ளார். பின்னர், அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது மணிகண்டனும் மாரடைப்பால் இறந்து போனது தெரிய வந்தது. தக்கலை போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அனுமதித்தனர் . மணிகண்டனுக்கு மஞ்சு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.