தென்காசி மாவட்டத்தில் அஞ்சல் வாக்கைப் படம்பிடித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தொடர்பாகப் பள்ளி ஆசிரியை, அவர் கணவர் உட்பட மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி தொகுதிக்கான அஞ்சல் வாக்குச்சீட்டைப் பதிவு செய்த படம் சமூக வலைத்தளத்தில் பரவியது. இது குறித்துக் காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்ததால், அஞ்சல் வாக்குச் சீட்டு எண்ணுக்குரிய ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர் தான் அஞ்சல் வாக்கைப் படம்பிடித்துப் பதிவிடவில்லை எனக் கூறியதால் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளுக்கான வாக்குச்சீட்டை ஆசிரியை கிருஷ்ணவேணிக்கு மாற்றி வழங்கியது தெரியவந்தது. இதையடுத்துக் கிருஷ்ணவேணி, அவர் கணவரும் அமமுக பிரமுகருமான கணேச பாண்டியன், அமமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் மூவரையும் விடுவித்தனர்.