செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள்; வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

Mar 30, 2021 10:26:11 PM

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சந்தோஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்தோஷ் ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பொரசப்பட்டு, பொருவளுர், மூங்கில்துறைப்பட்டு, சவுரியார்பாளையம், மைக்கேல்புரம், அருளம்பாடி, உலகம்பாடி, மணலூர், மேல்சிறுவள்ளுர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவர், கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார். 

விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் தீவிர தேர்தல் பிரச்சாரம்

நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருமருகல், கொங்கராய நல்லூர், அம்பல், கயத்தார் உள்ளிட்ட இடங்களுக்கு திமுக மற்றும் விசிக ஆதரவாளர்களுடன் சென்ற அவர், பானை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடையே கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: கனிமொழி

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வேலுவை ஆதரவாக அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி வாக்குசேகரித்தார். கபாலி தோட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

விராலிமலை அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், இருசக்கர வாகனத்தில் சென்றும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். 

திருவள்ளூர் மப்பேடு பகுதியில் உலர் துறைமுகம் அமைக்கப்படும் - திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வாக்குறுதி

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மப்பேடு, கூட்டுச்சாலை, பூவல்லிக்குப்பம், அழிஞ்சிவாக்கம், விஸ்வநாகுப்பம்,
காந்திபேட்டை ஆகிய பகுதியில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த வி.ஜி.ராஜேந்திரன், மப்பேடு பகுதியில் உலர் துறைமுகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பழனி சிறு வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பழனி சிறு வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக,கே.பழனி, சிறு உணவகம் ஒன்றில் உணவருந்தி மக்களிடம் ஆதரவு திரட்டினார். 

பரமக்குடியில் கோயில் திருவிழாவுக்கு சென்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பக்தர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பக்தர்களிடம் போட்டிப்போட்டு கொண்டு வாக்குசேகரித்தனர் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாத பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் கோயில் முன் ஆதரவாளர்களுடன் திரண்ட பரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசன், அங்குவந்த பக்தர்களிடம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு போட்டியாக அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக்கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியன் மேளதாளம் முழங்க நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பெரியமேடு பகுதியில் ஆதரவு திரட்டினார். நேவல் மருத்துவமனை சாலை, ஸ்டிங்கர்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு மேளதாளம் முழங்க நடந்து சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் ஆதரவாளர்களுடன் ஆட்டோ ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன்
ஆட்டோ ஒட்டிச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாமல்ல நகர், மாருதி நகர், கோனேரிகுப்பம், வையாவூர் பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் ஆட்டோ ஓட்டிச் சென்ற அவர், சாலையோர கடைகள், வீடுகளில் மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிழக்கு சண்முகபுரம் காலனி, புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில்  திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த சி.வி.சண்முகத்துடன் அக்கட்சி ஆதரவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தும், மேயராக இருந்தபோது சைதாப்பேட்டை தொகுதிக்கு தான் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறியும் அவர் ஆதரவு திரட்டினார். அப்போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பள்ளிப்படிப்பு குறித்து விசாரித்த அவர், தான் நடத்தும் அறக்கட்டளை மூலம் உயர் கல்விக்கு உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வையாபுரி நகர், காமராஜபுரம், செங்குந்தபுரம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூ வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம்விளக்கு பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூ வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மாம்பலம் மெயின் ரோடு, சோலை மாமணி தெரு, பார்த்தசாரதிபுரம், லாலா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். காய்கறி-மீன் கடைகள், டீ கடை என சாலையோர வியாபாரிகளிடமும் குஷ்பு வாக்கு சேகரித்தார்.

ஓட்டுக்காக தேர்தலில் நிற்கவில்லை எனவும் நாட்டுக்காகவும் நிற்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கணேஷ்குமார் மற்றும் ஆவடி வேட்பாளர் விஜயலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், தான் ஓட்டுக்காக தேர்தலில் நிற்கவில்லை எனவும் நாட்டுக்காகவும் நிற்பதாகவும் கூறினார்.

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சிஜெயராமன் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்தொகுதிக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் வீதி, சுண்ணாம்புக் காளவாய் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து மரப்பேட்டை வீதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலுக்குச் சென்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெகதீஷ்குமார் கிரிக்கெட் விளையாடியும் ,மீன் மார்க்கெட்டிற்கு சென்று மீன் வெட்டியும் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ்குமார், மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு சென்ற ஜெகதீஷ்குமார், வியாபாரிகளுடன் சேர்ந்து மீன் வெட்டி பிரச்சாரம் செய்தார்.

வெற்றி பெற்றால் சொந்த செலவில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை..! - சென்னை துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பிரச்சாரம்

வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்த செலவில் கழிவறை கட்டித் தருவதாக கூறி சென்னை துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பிரச்சாரம் செய்தார். யானைகவுனி குடிசைப்பகுதிக்கு சென்று வீடு வீடாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது இப்பகுதியில் நீண்ட நாட்களாக கழிப்பறை வசதி இல்லை எனவும் பொது கழிப்பிடத்தால் பெண்கள் சிரமப்படுகின்றனர் எனவும் இளைஞர் ஒருவர்  வேதனை தெரிவித்தார். அதைக் கேட்ட வினோஜ் பி செல்வம்  தான் வெற்றி பெற்று வந்த பிறகு தனது சொந்த செலவில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை அமைத்து தருவதாக கூறினார்.

வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா மீன் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குசேகரிப்பு

சென்னை வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா, சாலையோர மீன் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தான் வெற்றிப்பெறவுடன் மீன் வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான மீன் விற்பனை அங்காடி கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து பெசன்ட்நகர் கடற்கரை சாலை மற்றும் அதன் அருகிலுள்ள திடீர் நகர் ஆகிய பகுதிகளிலும் ஹசன் மௌலானா பிரச்சாரம் மேற்கொண்டார். 

மத்திய அரசு வரி வருவாயில் தமிழகத்துக்கு உரிய பங்கை வழங்கவில்லை - உதயநிதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் பாலுவை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். பெருந்துறை பேருந்து நிலையம் அருகே திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த உதயநிதி, சரக்கு சேவை வரி மூலம் தமிழகத்தில் இருந்து பெருமளவில் வரி வருவாயைப் பெற்று வரும் மத்திய அரசு, மாநிலத்துக்கு அதற்கான பங்கை வழங்கவில்லை என்றும், திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்றும் குறைகூறினார். 

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து  வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அனகாபுத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.   பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செளதாபுரம் ஊராட்சியில், பிரச்சாரம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி, அமைச்சர் தங்கமணி ஆதரவு திரட்டினார். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாணாக்கர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம் உள்ளிட்ட திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.

உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் சிலம்பம் ஆடி வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் சிறுவர்களுடன் சிலம்பம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ஐஞ்சூர், தேனம்பாக்கம், காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர்களுடன் பேரணியாக சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

மயிலாடுதுறை தொகுதியில் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி குப்பைகளை துடைப்பம் கொண்டு அகற்றியவாறு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சித்தமல்லி பழனிச்சாமி, நகராட்சிப் பகுதியில் குப்பைகளை அகற்றி வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் 12 வரையிலான வார்டுகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த குப்பைகளை துடைப்பம் கொண்டு அகற்றியவாறு பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

வந்தவாசி பாமக வேட்பாளர் முரளி பெண் தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்குசேகரிப்பு

திருவண்ணாமலை வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் முரளி, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்குவளைவேடு, ஆயலவாடி, எறும்பூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற முரளி, மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு திரட்டினார். எறும்பூரில் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் காலில் விழுந்த முரளி, ஒருமுறையாவது வாய்ப்பு கொடுங்கள் என மன்றாடி வாக்குசேகரித்தார். 

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா : தந்தையை ஆதரித்து மகன் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தேர்தல் பிரச்சாரம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிகிச்சைக்காக அவர் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக திருவந்திபுரம் தேவநாத கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், திருமேனி குழி, குணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

நெசவாளர் பிரச்சனைக்காக சிறை சென்றதாக திமுக வேட்பாளர் சின்னம்மாள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்

மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். ஜெய்ஹிந்த்புரம்,எம்.கே.புரம், சோலைஅழகுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிரமாக ஆதரவு திரட்டினார்.நெசவாளர் பிரச்சனையின் போது அவர்களுக்காக போராடி 15 நாட்கள் சிறையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

திமுக வாக்குறுதிகளை கூறி உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட மில்ட்ரி ரோடு, விஷ்வதாஸ் நகர், தேனம்பாக்கம், டெம்பிள் சிட்டி  உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய  திமுக வேட்பாளர் சுந்தர் திமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளர்களுக்கு பல சலுகைகள்வழங்கப்படும் என உறுதியளித்தார்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ரூ.300 ஊதியம்: துரைமுருகன்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலம்பட்டி கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய துரைமுருகன், திமுக வெற்றிப்பெற்ற பின் பர்கூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான படேதலாவ் ஏரி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியம் 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

குடியாத்தம் தொகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீக்குச்சிகளை அடுக்கி அதிமுக வேட்பாளர் பரிதா பிரச்சாரம்

குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரிதா, ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் தரையில் அமர்ந்து தீ குச்சிகளை அடுக்கியவாறு வாக்கு சேகரித்தார். இத்தொகுதிக்குட்பட்ட எர்த்தாங்கள் பகுதியில் கூட்டணிக் கட்சியினருடன் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு சென்ற அவர், தீக்குச்சிகளை அடுக்கி வைத்தும் தீப்பெட்டி பண்டல்களை ஒட்டியும் அத்தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருக்கு நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு

பாஜகவிற்கு வாக்களித்தால் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடி வரும் எனக் கூறி நெல்லை தொகுதியில் நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தாமரைக்கு வாக்களித்தால் கையில் துணி துவைத்து கஷ்டப்பட வேண்டாம், இலவச வாஷிங்மெஷின் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மாணவியின் செல்லப்பிராணியை கொஞ்சி வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு, கல்லூரி மாணவி ஒருவரின் செல்லப்பிராணியை கொஞ்சியவாறு வாக்கு சேகரித்தார்.

இந்த தொகுதியில் 3 ஆவது முறையாக செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். ஊர்மெச்சிகுளத்தில் தமக்கு ஆதரவு திரட்டிய அவர், அங்கு வந்த கல்லூரி மாணவியின் செல்லப்பிராணியை கொஞ்சி, அது குறித்த விவரங்களை கேட்டறிந்தவாறு வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனா : தந்தையை ஆதரித்து அவரது மகள் திவ்யா ராவ் தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரது மகள் திவ்யா ராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவரை கிராமம் கிராமமாக, வீதி வீதியாக அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தனர். தனது தந்தை அளித்துள்ள வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி திவ்யாராவும் வாக்கு சேகரித்தார்.

விளாத்திகுளம் தொகுதியில் அம்மியில் மசாலா அரைத்துக் கொடுத்து வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் சீனிச்செல்வி, அம்மியில் மசாலா அரைத்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலச்செய்தலை, கீழச்செய்தலை, சண்முகபுரம், கொல்லம்பரம்பு, கக்கரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அவர் ஆதரவு திரட்டினார். கக்கரம்பட்டி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் மிளகு, சீரகம், தேங்காய், சின்னவெங்காயம், மிளகாய் உள்ளிட்டவைகளைக் கொண்டு அம்மியில் மசாலா அரைத்துக் கொடுத்து அவர் வாக்கு சேகரித்தார். 

சென்னை ராயபுரம் தொகுதியில் மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் சென்று திமுக வேட்பாளர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம், சிபி ரோடு, நாகப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் சென்ற அவர், உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண் ஆதரவாளர்கள்  நடனமாடி ஆதரவு திரட்டினர்.

துணியை அயன் செய்தும் ஏலக்காயை தரம் பிரித்தும் வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் துணியினை அயன் செய்தும் ஏலக்காயை தரம் பிரித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஏலக்காய் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் தரையில் அமர்ந்தவாறு அவர் ஏலக்காயை தரம் பிரித்தார். அதேபோல் சாலையோரத்திலிருந்த ஒரு அயன் கடையில் துணியினை அயன் செய்தும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி தொகுதியில் சரக்குப்பெட்டகத் துறைமுகம் வந்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடற்கரையோர கிராமப் பகுதிகளான சின்னமுட்டம் ,வாவதுறை, புதுகிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர், தரையில் அமர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார். அப்பகுதியில் சரக்குப் பெட்டக துறைமுகம் 100 விழுக்காடு வரவே வாரது எனவும் அப்படி வருவதாக இருந்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாகவும் கூறினார்.

திருவள்ளூர் தொகுதியை நம்பர் 1 தொகுதியாக மாற்றி காண்பிப்போம் - திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன்

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான வி.ஜி.ராஜேந்திரன், கடம்பத்தூர் அருகே உளுந்தை பகுதியில் வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் தொகுதியை  நம்பர் 1 தொகுதியாக மாற்றி காண்பிப்போம் என்று பேசிய அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று  மாதிரி வாக்கு எந்திர படிவத்தை காட்டி வி.ஜி.ராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

தமிழகத்தில் திமுக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் - உதயநிதி

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத் குமாருக்கும், சங்ககிரி திமுக வேட்பாளர் ராஜேசுக்கும் அவர் ஆதரவு திரட்டினார். அப்போது தமிழகத்தில் திமுக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று அவர் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியனை ஆதரித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை ஆதரித்து அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் அகஸ்தியன்பள்ளி, மணியன்தீவு, கணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போல் வேடமிட்ட நபர் வீடு வீடாகத் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

குன்னூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பிரச்சாரம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்ட மன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக திமுக எம்.பி தயாநிதிமாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தயாநிதி மாறன் ஆதரவு திரட்டினார்.

அதிமுகவிற்கு வாக்களிக்க சசிகலா மறைமுகமாக கூறியுள்ளார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று, சசிகலா, தனது அறிக்கை மூலம் மறைமுகமாக கூறியுள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கயத்தார் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தேர்தலுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு சில வேண்டுகோள் வைக்க உள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொண்டால், அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி வாக்குகள் சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி வாக்குகள் சேகரித்தார். கருங்குளம் பஜாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,
தந்தை ஊர்வசி செல்வராஜ் பாணியில் மகனும் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் செய்வார் என்று கூறி ஆதரவு திரட்டினார்.

தி.மு.க கூட்டணியை எதிர்க்கும் சக்தி அ.தி.மு.க விற்கு இல்லை - திருமாவளவன்

சீர்காழி தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க கூட்டணியை எதிர்க்கும் சக்தி அ.தி.மு.க விற்கு இல்லை என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து பூம்புகார்தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்தும் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.

விராலிமலை தொகுதியில் அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது இளைய மகளும் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இலுப்பூர், அன்னவாசல், வடமலாப்பூர் உள்ளிட்ட இடங்களில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன், இருசக்கர வாகனங்களில் சென்று, கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வடமலாப்பூர் அருகே 130 ஏக்கரில் அமையும் சிப்காட் மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என வாக்குறுதி அளித்தார். பின்னர், திறந்தவெளி வாகனத்தில் சென்றும், பரப்புரை மேற்கொண்டார். விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது இளைய மகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தனித்துப் போட்டி - சீமான்

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாதவரம் பஜார் வீதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது தொண்டர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சீமானிடம் கொடுத்த நிலையில், அந்த குழந்தைக்கு இளவரசி என பெயர் சூட்டினார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் தனித்தே களம் காணப்போவதாகவும் அவர் கூறினார்.

அரசியலை புரட்டி போட வந்திருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பரணிராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே பரணிராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், அரசியலை புரட்டி போட வந்திருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம்  என்றும், அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு ஊர் ஊராக சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அயோத்திகுப்பம் பகுதியில் உள்ள பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர் அதனை தீர்ப்பதாக உறுதி அளித்து ஆதரவு திரட்டினார். அப்போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் கணவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த துர்கா ஸ்டாலின் தற்போது மகனுக்கு ஆதரவாக சேப்பாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தறியில் துணி நெய்து நெசவாளர்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயராம், பீளமேடு அடுத்த தண்ணீர் பந்தலில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த நெசவாலையில் தறி நெய்து நெசவாளர்களிடம் ஆதரவு திரட்டினார்.

அதை தொடர்ந்து ஒண்டிபுதூரில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

லால்குடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - கே.என்.நேரு

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் 4 வது முறையாக போட்டியிடும் வேட்பாளர் அ. செளந்திரபாண்டியனை ஆதரித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார்.

வாளாடி ஊராட்சியில் திறந்த வேனில் நின்றவாறு பேசிய கே.என்.நேரு, திமுக வெற்றிபெற்றால் லால்குடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார். தொடர்ந்து பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்ற அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம், ஈரோடு மாவட்டங்களில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெருந்துறை, பவானி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், அவிநாசி, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

படித்து "பாஸ்" பண்ணும்படி மாணவனுக்கு அறிவுரை கூறிய அமமுக வேட்பாளர்

சென்னை சைதாப்பேட்டையில், அமமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மேட்டுப்பாளையம் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன், தேர்வில் ஆல் பாஸ் போடுவீர்களா என கேட்ட போது, அவர் படித்து பாஸ் பண்ணால் தான் நுழைவுத்தேர்வு எழுத முடியும் என அறிவுரை கூறினார்.

இஸ்திரி கடைக்குள் சென்று துணியை இஸ்திரி செய்து ஆதரவு திரட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை இராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இஸ்திரி கடைக்குள் சென்று துணியை இஸ்திரி செய்து கொடுத்து ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது தொண்டர்களுக்கு ஐஸ் கிரீம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ள பெண்களும் குழந்தைகளும் முண்டியடித்ததால் காவலர் வந்து கூட்டத்தை கலைத்தார்.

விஜயகாந்தை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உற்சாக வாழ்த்தொலி.!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில், அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேசை ஆதரித்து, தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தம் எதிரே திறந்த வேனில் நின்றவாறு  தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தும், கட்டை விரலை உயர்த்தி காட்டியும், கையெடுத்து கும்பிட்டும், முரசு சின்னத்தை காண்பித்தும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயகாந்தைப் பார்த்த பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று அவர் ஆதரவு திரட்டினார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவரும் என அண்ணாமலை கூறினார். 

சிலம்பம் சுற்றியும், மல்லர் கம்பம் ஏறி சாகசம் செய்தும் சிறுவர்கள் நூதன பிரசாரம்

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆர். லட்சமணன் மேளம் அடித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பகதூர்ஷா கடைவீதி, ஜி.ஆர்.வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், மற்றும் வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக சிறுவர்கள் சிலம்பம் சுற்றியும், மல்லர் கம்பம் ஏறியும் சாகசங்கள் செய்து லட்சமணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

கமல் "உதடுகளுக்கு மட்டுமே" சேவை செய்பவர் - வானதி சீனிவாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உதட்டளவில் சேவை செய்பவர் என்பதோடு, தன்னுடைய உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்துகொள்பவர் என கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

அண்மையில் வானதி சீனிவாசனை கமல் துக்கடா அரசியல்வாதி என விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், சொர்ணாம்பிகா லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், கமலை கடுமையாக விமர்சித்தார்.

ஜூன்-3 கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் - வி.ஜி.ராஜேந்திரன்

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ-வுமான வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடம்பத்தூரில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்ட வி.ஜி.ராஜேந்திரன், தேர்தல் அன்று வாக்கு எந்திரத்தில் முதல் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு மாதிரி வாக்கு எந்திர படிவத்தைக் காட்டி மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Advertisement
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம்.. பயிருக்கு குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கடலூர் அருகே ஐயப்ப பக்தர்களிடம் போக்குவரத்து போலீசார் சிலர் கட்டாய வசூல்.?
நெல்லையில் 5 இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம்
கடல் நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
டயர் வெடித்ததால் தனியார் ஆம்னி பேருந்து விபத்து ஓட்டுநர் உள்பட 5 பேர் காயம்
வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு... பிடிபட்ட பின்னரும் தப்பி ஓட முயற்சி... வனத்துறையினரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை வீரர்கள்
நெல்லையில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்... கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
முதலமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியதாக விசிக பிரமுகர் மீது புகார்... பேசியதை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி மீது தாக்குதல்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement