திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மினி வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாலைப்புதூரிலுள்ள நூற்பாலைக்கு தொழிலாளர்கள் 14 பேரைக் ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கலில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மினி வேன் மீது பலமாக மோதியது.
வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.