தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற அதிமுக நாடகமாடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், அதிமுகவும் பாமகவும் மக்களை ஏமாற்றும் வகையில் நாடகமாடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் வீரமணி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தின் சுயமரியாதையை காப்பதற்கான தேர்தல் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் வீதிகளில் நடந்து சென்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முகமது நயீமுக்கு வாக்கு சேகரித்தார். கடைக்காரர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என வழி நெடுக ஆதரவு திரட்டிய மு.க.ஸ்டாலினுடன், பலரும் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.