தனது தாயார் குறித்தான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு குறித்து பேசியபோது, கண்கலங்கிய முதலமைச்சர், தாயார் குறித்து தவறாகப் பேசுபவர்களை இறைவன் மன்னிக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.
சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக சென்னை மாநகரை மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார். சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று கூறிய முதலமைச்சர், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதால் பலரும் இங்கு தொழில் தொடங்க விரும்புகின்றனர் என்றார்.
2019ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 3 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர், அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் கூறினார்.
தடையற்ற மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று மு.க.ஸ்டாலின் நினைத்துவிட்டார் என்றும் ஆனால் தாம் எதை நினைத்தாலும் சாதிப்பேன் என்றும் எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
உலகளவில் குற்றங்கள் நடக்காத நாடுகளும் கிடையாது, குற்றங்கள் நடக்காத மாநிலமும் கிடையாது என்று கூறிய முதலமைச்சர், ஆனால் குற்றம் குறைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றார்.
தொடர்ந்து திருவொற்றியூர் தொகுதிக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசாவின் தனது தாயார் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து பேசத் தொடங்கிய முதலமைச்சர், பேச்சு வராமல் கண்கலங்கினார்.
தாயைப் பற்றி தவறாகப் பேசும் யாரையும் இறைவன் மன்னிக்கமாட்டார் என முதலமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, சென்னை ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.