கொளத்தூரை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இன்று அவர் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தமக்காக வாக்கு சேகரித்தார். மாலை முதல் இரவு வரை கொளத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் எல்லாம் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
வீதி, வீதியாக சென்ற அவருக்கு தொகுதியில் உள்ளோரும், திமுகவினரும் வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் ஸ்டாலினுக்கு சால்வைகளும் , மாலைகளும் அணிவித்து ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்டாலின் வருகைக்காக்க பல இடங்களில் திமுக கொடியின் வண்ணமான கருப்பு, சிவப்பு நிறத்திலான பாலூன்களை கொண்டு வரவேற்பு வளையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. வாண வெடிகளை வெடித்தும் ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.
பிரசார பயணத்தின் போது பேசிய ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு தேர்தலுக்கு மட்டுமே வந்து செல்லவில்லை என்றார். மழை,வெள்ளமாக இருந்தாலும், கொரோனா காலமாக இருந்தாலும் வாரம் இரு முறை கொளத்தூர் தொகுதி மக்கள் சந்தித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் அறிவித்த பின்னர் முதல் முதலாக கொளத்தூருக்கு வருவதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாக குறிப்பிட்டார். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போல, பல தொகுதிகளுக்கு சென்று விட்டு கொளத்தூருக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
கொளத்தூர் முதலமைச்சர் வேட்பாளரின் தொகுதி என்ற ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக கொளத்தூரை மாற்ற வேண்டும் என்பதே தமது லட்சியம் என்றார்.
உங்கள் வீட்டுப்பிள்ளையான கருதி தம்மை தேர்வு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.தமிழகத்தில் மற்ற தொகுதிகளில் எல்லாம் வேனில் சென்று பிரசாரம் செய்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார்.
கொளத்தூர் தொகுதியில் காசி விஸ்வநாதன் கோவில், அன்னை சத்யா நகர், அயனாவரம் பஸ் நிலையம், ஆண்டர்சன் சாலை, ராகேவந்திரா கோவில், திருக்காகுளம் சலவை செய்யும் இடம், ரெயில்வே ரோடு, மைலப்ப தெரு, பங்காரு தெரு ஜங் ஷன் உள்பட பல இடங்களில் மு.க. ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.