தேனி அருகே தகாத உறவால் இளம் பெண் மற்றும் அவரின் ஒன்றரை வயது மகனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியவன் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டி பகுதியில் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி(வயது 22), இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காசிராஜனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கரண் சர்மா என்ற மகன் உண்டு. திருமணத்துக்கு முன்பு பெரிய குளத்தில் உள்ள கல்லூரியில் கலைச்செல்வி படித்து வந்துள்ளார். அப்போது , சின்னமனூர் தேவர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மற்றும் இறைச்சி கடை வைத்துள்ள சிலம்பரச கண்ணன் என்பவனுடன் கலைச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிலம்பரச கண்ணனுக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளன. கலைச்செல்வி க்கு திருமணம் முடிந்த பின்னரும் சிலம்பரச கண்ணனுடன் தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார்.
கடந்த 2020 செப்டம்பர் 9 ஆம் தேதி குழந்தையுடன் க, புதுபட்டியிலிருந்து பேரையூர் செல்வதாக கூறிச்சென்ற கலைச்செல்வி வீடு திரும்பவில்லை, தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், அவரின் தந்தை உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கலைச்செல்வியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில் கலைச்செல்வி திருமணமான பின்பும் சிலம்பரசன் கண்ணனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. கலைச்செல்வி தன் நகைகளை சிலம்பரசன் கண்ணனிடம் கொடுத்துள்ளதும் , அந்த நகைகளை விற்று அவன் கார் வாங்கி ஓட்டி வந்துள்ளதும் தெரிய வந்தது. இதற்கிடையே கலைச்செல்வியின் குடும்பத்தினர் நகைகள் எங்கே போச்சு என்று கேட்க தொடங்கியுள்ளனர். இதனால், பயந்து போன கலைச்செல்வி சிலம்பரச கண்ணனிடம் நகைகளை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அல்லது தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு சிலம்பரசன் கண்ணனை கலைச்செல்வி வற்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, 2020 செப்டம்பர் 9-ஆம் தேதி சின்னமனூரில் உள்ள வீட்டிற்கு கலைச்செல்வியை சிலம்பரச கண்ணன் வர வைத்துள்ளான்.அப்போது, நகைகள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனை கத்தியை கொண்டு வர கூறி , கத்தியால் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டினார். பின்னர் 3 சாக்கு மூட்டைகளில் கட்டி ஆட்டோவில் ஏற்றி சின்னமனூர் முத்துலாபுரம் செல்லும் சாலையில் உள்ள அய்யனார்குளம் பகுதியில் வீசி விட்டான். உத்தமபாளையம் காவல்துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலம்பரச கண்ணன் மற்றும் 18 வயது சிறுவனையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அய்யனார்குளம் பகுதியிலிருந்து கலைச்செல்வி மற்றும் குழந்தையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தடயவியல் துறையினர் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சிலம்பரச கண்ணனிடம் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 ஆட்டோக்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.