திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,ஆரம்பகாலத்தில் பூணூல் அணிந்திருந்த திருவள்ளுவர் படத்தில் இருந்து பூணூலை தூக்கி எறிந்து வள்ளுவருக்கு புதுவடிவம் தந்தவர் கருணாநிதி என்று பாராட்டினார்.
சென்னை திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, எழும்பூர், துறைமுகம் , திருவிக நகர் உள்ளைட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் பேசியபோது, கருணாநிதி ஜெயலலிதா இல்லை என்பதால் அதிமுக முதுகில் சவாரி செய்து அந்த கட்சியை தன்வயப்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது என்ற திருமாவளவன், இந்த தேர்தலில் பாஜகவினர் ஓட ஓட விரட்டப்படுவர் என்று தெரிவித்தார்.
திருவள்ளுவருக்கு பூணூல் போட்ட படம் தான் தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்ததாகவும், அந்த பூணூலை தூக்கி எறிந்து புது வடிவம் தந்தவர் கருணாநிதி என்று பாரட்டிய திருமாவளவன், தற்போது பா.ஜ.கவினர் திருவள்ளுவருக்கு மீண்டும் காவி அடித்து பூணூல் போடுகிறார்கள் என்றார்.
திமுக கூட்டணியில் கடந்த 2011 தேர்தலில் 10 சீட்டு பெற்ற தான் தற்போது பா.ஜ.க உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காகவே 6 சீட்டுக்கு ஒப்புக் கொண்டு முதல் ஆளாக கையெழுத்துப் போட்டதாக தெரிவித்தார்.
தன்னை சிலர் கிறிஸ்தவர் என்று விமர்சிப்பதாகவும், உண்மையில் எனது அக்கா கிறிஸ்தவர் என்பதே அவர் இறந்த பின்னர்தான் தனக்கு தெரிந்தது என்று திருமாவளவன் கூறினார்.