சட்டம்- ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுவதால் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நெல் உற்பத்தியில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் இருந்ததை விட 30 மடங்குப் பணிகளை செய்து வருவதாகக் கூறிய துணை முதலமைச்சர், கடந்த பத்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏதுமின்றி அமைதியான மாநிலமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
உடுமலைப்பேட்டை வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்து பேசினார். மின்பற்றாக்குறையைப் போக்கி தற்போது மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.