விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலின் போது ஒதுக்கப்பட்ட பானைச் சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை நடந்ததாக காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் ஒதுக்கப்பட்ட பானை சின்னத்தை தங்களுக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அந்த கட்சிக்கு 6 தொகுதிகளிலும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காட்டுமன்னார் கோயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிந்தனை செல்வன், தங்களுக்கு பானை சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான கோவில்களில் பிரார்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
கடந்த தேர்தலில் பானைச் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டினார்,
உண்மையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட, திருமாவளவன் 3,219 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடதக்கது.