ரேணி குண்டா படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். நடிகர் அஜித்குமாரின் பில்லா2 , தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார்.கொரோனா லாக்டவுன் காரணமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். பின்னர், மதுரையில் புரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தார். ஜெய்ஹிந்த் புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உண்டு.
வருமானம் இல்லாத சூழலில் அவரின் குடும்பமும் கஷ்டப்பட்டு வந்தது. நடிகர் அஜித் குமாரிடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று காத்திருந்த போதும், அவரை சுற்றியிருந்தவர்கள் தன்னை நெருங்க விடவில்லை என்று வேதனையுடன் ஒரு பேட்டியில் தீப்பட்டி கணேசன் கூறியிருந்தார். ஊரடங்கு காலத்தின் தன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லை என்றும் ஒரு முறை அவர் வேதனையுடன் கூறியிருந்தார்.
இதையடுத்து, நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், தீப்பெட்டி கணேசனின் வீட்டுக்கு நேரடியாக சென்று, மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தார். குழந்தைகள் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்திருந்தார். எனினும், தீப்பெட்டி கணேசன் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நடிகர் தீப்பட்டி கணேசன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாள்களாக அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
தொடர்ந்து, தீப்பெட்டி கணேசனின் உடல் ஜெய்ஹிந்த் புரத்திலுள்ள வீட்டில் அவரின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரின் உடலைக் கண்டு மனைவியும் குழந்தைகளுடம் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தீப்பெட்டி கணேசனின் உடலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இறுதிஅஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தீப்பெட்டி கணேசனின் மரணம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி, ''எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, தீப்பெட்டி கணேசன் போன்ற சிறிய கலைஞர்கள் கொரோனா காலத்தில் தங்களையும் குடும்பத்தையும் வறுமையில் இருந்து மீட்க முடியாமல் போராடி வருகின்றனர். நடிகர் தீப்பெட்டி கணேசனும் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்தார். முடிவில் அவரே பலியாகி விட்டது திரையுலக ஏழ்மை கலைஞர்களை கலங்கடித்துள்ளது.