வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கமாக ஆளும் அதிமுக அரசு விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதம், சாதி மோதல் இல்லாமல், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், இ.பி.எஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பரப்புரை மேற்கொண்டுள்ளார். அவர் ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அதை முடிந்த பிறகு தொடங்கியும் வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் என அதிமுக அரசு மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக திகழ்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
அதிமுக கூட்டணி வலுவான., வெற்றிக் கூட்டணி என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில், 30 ஆண்டு காலம் ஆட்சியில் செய்த ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும், இ.பி.எஸ் கூறினார். முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்ற ஒரே அரசாக, ஆளும் அதிமுக அரசு விளங்குவதாக, முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் விக்கிரவாண்டி,மயிலம், வானூர், செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.