தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடத் தாக்கலான வேட்பு மனுக்களை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுவில் வேட்பாளரின் சொத்துக்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், வருமானம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர். பரிசீலனை முடிந்த பின் ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்கப்பட்ட மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரங்கள் தெரியவரும்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதே போல் சென்னை சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சித் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுவில் அரசு தரப்பு வழக்கறிஞரின் பரிந்துரை கையெழுத்து இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, வேட்பாளர்களின் வேட்புமனுவை தனித்தனியாக பரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சிலர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வேட்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நில அபகரிப்பு தொடர்பாக நல்லதம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்புலட்சுமி வேட்பு மனுவில் படிவம் 26ல் கையெழுத்தில்லை என்று கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதை கண்டித்து சுப்புலட்சுமியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.