தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 4,751 பேரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் ஆறாம் நாள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் நாள் தொடங்கியது. பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
தேர்தல் ஆணையத் தகவல்படி தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாலாயிரத்து 953 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆண்கள் நாலாயிரத்து 170 பேரும், பெண்கள் 78 பேரும், திருநங்கையர் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகப்பட்சமாகக் கரூரில் 73 மனுக்களும், மேட்டூரில் 62 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
குறைந்த அளவாக விளவங்கோட்டில் 6 மனுக்களும், அணைக்கட்டில் 7 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 12 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நாளை நடைபெறும். மனு தாக்கல் செய்த ஒருவர் போட்டியில் இருந்து விலக நினைத்தால் வேட்பு மனுவை மார்ச் 22ஆம் நாள் வரை திரும்பப் பெறலாம்.
அன்று மாலை ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6 அன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மே இரண்டாம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.