நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு, காரணம் அவரின் மனைவி என்பது கூடுதல் தகவல்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சந்தனவீரப்பனை பிடிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெள்ளத்துரை. தமிழக போலீஸில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான இவர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பல ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளார். ரவுடிகள் பிரபு, பாரதி, கவியரசு, முருகன் ஆகியோரை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் ரவுடி அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுன்டர் செய்த குழுவிலும் வெள்ளத்துரை இடம் பெற்றிருந்தார். தற்போது, நெல்லை மாநகர கூடுதல் கமிஷனராக வெள்ளத்துரை உள்ளார். இவரின் மனைவி பெயர் ராணிரஞ்சிதம். தற்போது, 54 வயதான ராணி ரஞ்சிதம் எம்ஏ எம்.பில் தமிழ் இலக்கியம் படித்துள்ளார்.
திருச்சியில் உள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். வெள்ளத்துரை ராணி ரஞ்சிதம் தம்பதிக்கு சுந்தரி, நிக்கின் என்ற மகள், மகன் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். இதில், சுந்தரிக்கு திருமணமாகி விட்டது. சமுதாய நலப்பணிகளில் அக்கறை கொண்டுள்ள ராணி ரஞ்சிதம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ராணி ரஞ்சிதம் முடிவு செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க சார்பில், போட்டியிடுகிறார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் இசக்கி சுப்பையா, தி.மு.ச சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் களத்தில் உள்ளனர். வலுவான வேட்பாளர்கள் இருந்தாலும், தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று ராணி ரஞ்சிதம் உறுதியுடன் கூறியிருந்தார்.
இதற்காக, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ராணி ரஞ்சிதம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்பாளர் ராணி ரஞ்சித்தின் கணவர் வெள்ளத்துரை நெல்லை மாநகர காவல்துறை கூடுதல் துணை ஆணையாளராக குற்ற ஆவண காப்பகத்தில் பணி செய்து வருகிறார். தேர்தல் பணியில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவரது மனைவி போட்டியிடும் தகவல் வெளியானதால், காவல் துறை இயக்குனர் உத்தரவின்பேரில் சென்னை காவல்துறை தலைமையக காத்திருப்போர் பட்டியலுக்கு வெள்ளத்துரை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.