இரிடியம் மோசடி வழக்கில் பழம் பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் இசையமைப்பாளர் அம்ரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஜெயசித்ரா, தன் மகனை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற போராடியது தெரிய வந்துள்ளது.
குறத்தி மகள், அரங்கேற்றம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா. இவரின் கணவர் கணேஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்து போனார். இந்த தம்பதிக்கு அம்ரிஸ் என்ற மகன் உண்டு. ஜெயசித்ரா, அம்ரிஸ் ஆகியோர் சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசிக்கிறார். இசையமைப்பாளரான அம்ரிஸ் நடிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின்-2 உள்ளிட்ட சில தமிழ் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். நானே என்னுள் இல்லை என்ற சினிமா படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தி.நகரில் இசையமைக்கும் பணியிலிருந்த அம்ரிஸை மப்டி போலீஸார் சிலர், அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும், நடிகை ஜெயசித்ரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, தன் மகனை போலீஸார் அழைத்து சென்றதாகவும் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் புகார் கூறியுள்ளார். அப்போதுதான், போலீஸார்,' உங்கள் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் ' என்று அவரிடத்தில் தகவல் கூறவே ஜெயசித்ரா அதிர்ந்து போனார்.
ஜெயசித்ராவின் மகன் அம்ரிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வளசரவாக்கம் ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்று கூறியுள்ளார். பின்னர், அம்ரிசும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.26 கோடி வாங்கிக்கொண்டு, போலியான இரிடியம் பொருளை கொடுத்து ள்ளனர். இந்த இரிடியத்தை மலேசிய நிறுவனம் ஒன்று, ரூ. 2.50 லட்சம் கோடிக்கு வாங்க தயாராகவுள்ளது. எங்களுக்கு தற்போதைக்கு ரூ.26 கோடி போதும் அதை மட்டும் கொடுங்கள் என்று கூறி விற்றுள்ளார். அரியவகை இரிடியம்தான் என்பதற்காக கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் கொடுத்த சான்றிதழையும் அம்ரிஸ் நெடுமாறனிடத்தில் காட்டியுள்ளார்.
தொடர்ந்து, மலேசியாவுக்கு நெடுமாறனை அழைத்து சென்று அந்த நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது போன்றும் போலி நபர்களை வைத்து அம்ரிசும் அவரின் கூட்டாளிகளும் நாடகமாடியுள்ளனர். ஆனால், நெடுமாறன் ஆசைப்பட்டது போல மலேசிய நிறுவனத்திடமிருந்து எந்த பணமும் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த நெடுமாறன் இரிடியத்தை சோதித்து பார்த்த போது, போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு நெடுமாறன் , அம்ரிஸிடத்தில் கேட்ட போது, முறையான பதில் இல்லை. தலைமறைவாக இருந்து தன் இசைப்பணிகளை பார்த்து வந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், நெடுமாறன் கொடுத்த புகாரினடிப்படையில் போலீஸார் அம்ரிஸை கைது செய்தனர். மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த நடிகை ஜெயசித்ரா, நேற்று நீண்ட நேரமாக கமிஷனர் அலுவலகத்திலேயே இருந்து அம்ரிஸை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற முயன்றார். ஆனால், கைது நடவடிக்கையிலிருந்து ஜெயசித்ராவால் மகனை காப்பாற்ற முடியாமல் போனதால் மிகுந்த மன வருத்தத்துடன் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.