தமிழகத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு முககவசம் அணியாமல் கும்பலாக செல்லும் நபர்களால் கொரோனா பரவல் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரதுறையினர் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. 5450 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கடலூரில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பேருந்தை மறித்து முககவசம் அணியாத நடத்துனருக்கு 100 ரூபாய் ஸ்பாட் பைன் வசூலிக்கப்பட்டது. தனியார் பேருந்து நடத்துனர், கார் ஓட்டுனர் என முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டதோடு முக கவசமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக முககவசம் இல்லாமல் அனைத்து கட்சியினரும் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து வருகின்றனர்.
நெல்லையில் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு பொன்னாடை போர்த்துவதாக நெருக்கி அடித்து அவரை கட்டித்தழுவி சமூக இடைவெளி என்றால் என்ன என்பது போன்ற அபாய நிலை உருவாக்கியுள்ளனர் அக்கட்சியினர்.
சென்னை திருவிக நகரில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் கல்யாணி அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்கள் முண்டியடித்த நிலையில், அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஒருவர் கூட முககவசம் அணியவில்லை.
ஆனால் அந்தியூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி கருப்பண்ணன் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நபர்கள் முககவசம் அணிந்து பங்கேற்றது சற்று ஆறுதல் அளித்தது
வேட்புமனுத்தாக்கலுக்கு வந்த ஆத்தூர் திமுக வேட்பாளர் பெரியசாமி உள்ளிட்ட கட்சியினர் ஒருவர் கூட முககவசம் அணியாமல் காவல்துறையினரை நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர்
கோவில்பட்டியில் வேட்புமனுதாக்கலுக்கு சென்ற அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோர் முன் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்திருந்தனர்.
திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் பா.ம.க வேட்பாளர் அறிமுககூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஒருவர் கூட முககவசம் அணியவில்லை, இது போதாதென்று முண்டியடித்துக் கொண்டு ஒரு கும்பல் சாப்பாட்டிற்கு கையேந்திக் கொண்டிருந்தது.
கொரோனா பரவலை தடுக்கின்ற எந்த ஒரு முன் எச்சரிக்கையும் பின்பற்றாமல் இப்படியே முண்டியடித்து தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தால் இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காகும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்
அதே நேரத்தில் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை போல வாக்கு சேகரிக்க செல்வதற்கும் மக்கள் சமூக இடைவேளியின்றி கும்பலாக கூடுவதை தவிர்ப்பதற்கும் தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் கூடும் இது போன்ற சுய கட்டுப்பாடில்லா கூட்டங்களால் புதிய கொரோனா ஹாட்ஸ் பாட்கள் உருவாகாமல் இருந்தால் சரிதான்..!