அதிமுக அரசு வழங்கிய ஏழு புள்ளி 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளியில் படித்த 435 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு நேற்று இரவு அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை ஆதரித்து திறந்த வாகனத்தில் நின்றவாறு முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உச்சநீதி மன்றம் வரை சென்று பெற்று தந்தவர் ஜெயலலிதா என்றார். நாடாளுமன்றத் தேர்தலைப் போல் தி.மு.க. இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் 58 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை அதிமுக அரசு திறந்துள்ளதாகக் குறிப்பிட்டார். உள் ஒதுக்கீட்டால் 435 பேர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
புயல், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியதை நினைவு கூர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திரட்டினார். இன்று திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.