பாஸில் செல்பவர்கள் இருக்கையில் அமர்ந்து வரக் கூடாது என்று பள்ளி மாணவனை தாக்கிய கண்டக்டரை பொதுமக்கள் ரவுண்டு கட்டியதால்,மன்னிப்பு கேட்டு தப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் கீழ் வழிச்சாலை மார்கத்தில் அரசுப்பேருந்து ஒன்று இயங்கி வருகிறது.உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. பேருந்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் ஏறி இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். மாணவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பதை கண்ட கண்டக்டர் ஜெகன், கோபத்தில் மாணவர்களை தகாத வார்த்தைகளால் ,திட்டியதாக கூறப்படுகிறது. பாஸில் செல்பவர்கள் இருக்கையில் அமரக் கூடாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. மாணவர்கள் இருக்கையில் இருந்து எழாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால், மேலும் கோபமடைந்தை கண்டக்டர் , மாணவர்களை பேருந்தை விட்டு இறங்கி வேறு பேருந்தில் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
ஆனால், மாணவர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கண்டக்டர் ஜெகன் ஒரு மாணவனை தலையில் அடித்துள்ளார். அடிவாங்கிய மாணவன் அழுதுகொண்டே பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்று தன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பேருந்து நிலையத்துக்கு உறவினர்களுடன் வந்தனர். பின்னர், பேருந்து நிலைய நேர தணிக்கையாளர் அலுவலகத்தில் கண்டக்டர் ஜெகனை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த கண்டக்டர் ஜெகன் செய்த தவறுக்காக மாணவனிடமும், பெற்றோரிடமும், மன்னிப்பு கோரி அங்கிருந்து தப்பினார்.
பொதுவாகவே, அரசு அளிக்கும் பஸ் பாஸ்களை பயன்படுத்தும் மாணவர்களை இழிவாக நடத்தும் போக்கு அரசு கண்டக்டர்களிடத்தில் உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். இந்த நிலை, மாற வேண்டும். மாணவ மாணவிகளை தங்கள் குழந்தைகள் போல கருதி கண்டக்டர்கள் செயல்பட வேண்டுமென்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.