தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 800ஐ கடந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு சுமார் 500 என்கிற அளவிலேயே பதிவாகி வந்த நிலையில், 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் மாநிலத்தில் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 476 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.நோய் பரவல் அதிகரித்துள்ளதால், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரங்களின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான வழிமுறைகள் உரிய முறைகளில் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார்.