வன்னியர்களுக்கான பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த மேலும் இரு வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்டுவ கவுண்டர் சமுதாயம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கெனவே பிரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்தத் தகவலையும் வழங்காத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்குவதும் விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவர் சமுதாயம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு மற்றும் நீதித்துறையில் போதிய இடங்களை வன்னியர்கள் பெற்றுள்ளதாகவும், சமூகத்தில் அவர்களின் நிலை, கல்வித்தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், வன்னியர்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன், இதே கோரிக்கைகளுடன் ஏற்கெனவே உள்ள வழக்குகளுடன் பட்டியலிட அறிவுறுத்தியது.