வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட 2 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடும், சீர்மரபினருக்கு ஏழு விழுக்காடும் உள் ஒதுக்கீடு வழங்கியதால், அந்த வகுப்பில் உள்ள 40 சமூகத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை உள் ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதே கோரிக்கையுடன் சுரேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.