நாகையில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த காவலர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார். அப்போது அதே குடியிருப்பில் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார் என்பவர் அவரை தடுத்து நிறுத்தி, வண்டியில் இருந்து கீழே தள்ளி கன்னத்தில் கடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் ,அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அப்போதும் பெண் காவலரை சிவகுமார் விடமால் துரத்தியதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய பெண் காவலர் பிரவினா, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.
சிறப்பு டிஜிபி மீது பெண்காவலர் ஒருவர் ஏற்கனவே புகார் அளித்துள்ள நிலையில்,
மீண்டும் ஒரு பெண் காவலருக்கு தலைமை காவலரே பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.