திருச்சி மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உயிர்க்குப் போராடிய பசுவிற்குப் பிரசவம் பார்த்து பத்திரமாகக் காப்பாற்றிய சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறது.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு புறம் அரசியல் காட்சிகள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பணப் பட்டுவாடா நடப்பதைத் தவிர்க்கத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பாளரான ஜோசப் அனினியோ ஆண்டனி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமைக் காவலர் மணிமாறன் ஆகியோர் திருச்சி மாவட்டம் வயலூர் ரோடில் உள்ள மல்லிகை பத்து கிராமத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிகாரிகளுக்கு நள்ளிரவு 2 மணியளவில் பசு ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது, பிரசவ வலியுடன் அந்த பசு உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்தது.
பசுவின் உரிமையாளர் அருகில் உள்ள கால் நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவரது வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால் வலி தாங்க முடியாமல் அந்த பசு கத்திக்கொண்டே இருந்தது. உரிமையாளர் செய்வதறியாது, வேதனையுடன் பசுவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சற்றும் தாமதிக்காமல், பசுவிற்குப் பிரசவம் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாகப் பசுவிற்குப் பிரசவம் பார்த்து, கன்றை வெளியில் எடுத்தனர். இப்போது தாய் பசுவும் கன்றும் நலமுடன் இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் நெகிழ்ச்சி அடைந்த பசுவின் உரிமையாளர், தனது நெஞ்சார்ந்த நன்றியை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
சிறு வயது முதலே கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், பசு, கன்றீனும் சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது. அதனால் தக்க சமயத்தில், பசுவையும் கன்றையும் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. இதனைத் தொடர்ந்து, ஊர் மக்கள் பலரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.