செல்லாத பணம் என்கிற நாவலுக்காகத் தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 20 மொழிகளில் ஒவ்வொரு மொழியிலும் மூவர் கொண்ட நடுவர் குழு சிறுகதைகள், கவிதைகள், நாவல், நாடகம் உள்ளிட்ட வகைகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தமிழில் எழுத்தாளர் இமையம் எழுதிய "செல்லாத பணம்" என்கிற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்புப் பட்டயத்திலான பாராட்டுப் பத்திரம், பொன்னாடை, ஒரு லட்ச ரூபாய் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.
அண்ணாமலை என்னும் இயற்பெயரைக் கொண்ட இமையம் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கோவேறு கழுதைகள், செல்லாத பணம் உள்ளிட்ட 5 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நெடுங்கதை ஆகியவற்றை எழுதியுள்ளார்.