கோவை ஈஷா யோக மையத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை ஈஷா மையத்தில் நேற்று மாலை லிங்க பைரவி தேவியின் ஊர்வலத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. லிங்க பைரவிக்கு மகா ஆரத்தி நடைபெற்றபின், யோகா வேள்வியை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, மஹாசிவராத்திரி என்பது சிவனின் அருளை பெறுவதற்கு உகந்த ஒரு மகத்தான இரவு என்றும் இதை குறிப்பிட்ட மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாக பார்க்க கூடாது என்றும் தெரிவித்தார்.
பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாக பல்வேறு கலைக் குழுவினரின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன் குழுவினரின் பறையாட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தெலுங்குப் பாடகி மங்களி, ராஜஸ்தானிய கலைஞர் குட்லே கானின் கிராமியப் பாடல், பார்த்திவ் கோஹில் மற்றும் கபீர் கஃபே இசைக் குழுவினரின் நிகழ்ச்சிகள் களைகட்டின. ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரவர்த்தியின் வாய்ப்பாட்டு, சந்தீப் நாராயண் இசை மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
நள்ளிரவில் கண்ணைக் கவரும் 112 அடி உயர ஆதியோகி திவ்ய தரிசனக் காட்சியும் இடம்பெற்றிருந்தது.பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்ததுடன், கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இசை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.