மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையாருக்கு பால், தயிர் சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முனனதாக நந்தி மண்டபம் மேடையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் நாட்டிய கலைஞர்கள் சிவதாண்டவம் ஆடி நாட்டியாஞ்சலி செலுத்தினார்கள்.
மகா சிவராத்திரியை ஒட்டி திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மூலவர் வன்மீகநாதர்,அசலேஸ்வர்ர் ,காசி விஸ்வநாதர்,இந்திரன் பூஜீத்தலிங்கம், கமலாம்பாள், சப்தமாதர், ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடைபெற்றது.