லஞ்சம் பெற்ற பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனப் புகார் அளித்த பெண்ணைக் கைது செய்த உளுந்தூர்ப்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சொத்து தகராறில் எதிர் தரப்பு மீது வழக்குப் பதிவு செய்ய சுந்தரி என்பவரிடம், திருநாவலூர் காவல் உதவி ஆய்வாளராக இருந்த எழிலரசி ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அவர் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
லஞ்சம் பெற்ற பின்னும் தான் அளித்த புகாரின் மீது வழக்குப் பதியாதது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுந்தரி மீதே வழக்குப் பதிந்த எழிலரசி அவரைக் கைது செய்துள்ளார்.
இது தொடர்பாக சுந்தரி அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், இப்போது காவல் ஆய்வாளராக உள்ள எழிலரசிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.