கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை மீண்டும் அதிமுகவுக்கே ஒதுக்க வலியுறுத்தியும் வேட்பாளரை மாற்றக் கோரியும் சில இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியை, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்தும், எழும்பூர் அதிமுக பகுதிச் செயலாளர் மகிழன்பனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க கோரியும் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய அதிமுக எம்எல்ஏவான கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குடியாத்தம் - காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனி தொகுதிக்கு, அ.தி.மு.க., சார்பில், கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியை மீண்டும் அமைச்சர் பாஸ்கரனுக்கு வழங்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோன்று, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரனை மாற்றக் கோரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி அக்கட்சியினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி தனி தொகுதிக்கு செந்தில்குமார் என்பவர் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதிக்கு அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக இருக்கும் சந்திரபிரபா முத்தையாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவும் அவர்கள் வலியுறுத்தினர்