அதிமுக மற்றும் திமுகவில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் கேட்டு அடம்பிடித்த, சம்பந்தப்பட்ட கட்சி தொண்டர்கள், சாலையில் உருண்டு புரண்ட சம்பவம், அங்கு போட்டியிடும் கூட்டணி வேட்பாளரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றிகரமாக தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து விட்டன.
அதிமுகவில் தொகுதிப் பட்டியல் வெளியாகும் முன்பே கோவை தெற்கு தொகுதி கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதாவுக்கு செல்லப்போகின்றது என அறிந்து, தற்போதைய எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள் கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகை முன்பாக செய்த அட்ராசிட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல..!
கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாக ஒரு கும்பல் கையில் காகிதத்துடன் தங்கள் தொகுதிக்கு வேட்பாளராக அம்மன் அர்ஜூனனே வேண்டும் என நரம்பு புடைக்க கோஷமிட்டனர்.
அம்மன் அர்ஜூனனின் முரட்டு ஆதரவாளர் ஒருவர் சட்டையை கழற்றிப் போட்டு, குழந்தை போல அரை நிர்வாணமாக சாலையில் உருண்டு புரண்டு செய்த அடம் எல்லாம் சினிமாவை மிஞ்சிய ரகம்..!
இத்தனை மிரட்டலுக்கு உருட்டலுக்கும் பின்னர் இந்த ஆதரவாளர்களின் கோஷத்தை பற்றி கவலை கொள்ளாமல் கூட்டணி தர்மப்படி கோவை தெற்கு தொகுதி ஏற்கனவே வெளியான தகவலின் படியே பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
அதே போல திமுக கூட்டணியில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் அறிந்த திமுகவினர், அறந்தாங்கி தொகுதியை திமுகவுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய உடன் பிறப்பு ஒருவர் உதய சூரியன் உதிக்கணும் என்ற ஆசையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் விபரீத முடிவை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் பல்லடம் தொகுதியில் மதிமுக உதய சூரியன் சின்னத்தில் களம் காணும் நிலையில் திமுகவில் உழைத்தவர்களுக்கு பல்லடம் தொகுதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் படுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
இவர்கள் நிலை இப்படி என்றால் பல்லடத்தில் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்த நடராஜனுக்கு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர்.